வலக்கண், இடதுகண், வலது மூக்குத் துவாரம், இடது மூக்குத் துவாரம், வலது காது, இடது காது, வாய், இன உறுப்பு மற்றும் மல துவாரம் ஆகியவை ஒன்பது துவாரங்கள்.
இவையெல்லாம் உள்ளுக்கும், புறத்துக்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் பொதுவான குணம் காற்றைக் கடத்த உதவுகின்றன.
உள்ளுக்கும், புறத்துக்கும் கடத்துவதற்கு.
நம் உடலில் மேலும் ஒரு துவாரம் உள்ளது. அதுவும் காற்றைக் கடத்துகின்றது. ஆனால் உள்ளுக்கும், புறத்துக்கும் அல்ல.
அந்த துவாரம் மெல்லிய மயிரிழை அளவே இருக்க கூடியதும் ... நம் அண்ணாக்குக்கு மேல் பகுதியில் அமைந்திருப்பதாகும்.
அது வழியாக, உள்ளுக்கும், உள்ளுக்குமாக ... உள்ளேயே காற்றுக் கடத்தப் படுகிறது.
"கண்ணாக்கு மூக்கு செவி ஞானக் கூட்டத்தில்
பண்ணாக்கு வைத்த பழம் பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கினூடே அகண்ட வொளி காட்டி
பண்ணாக்கி நம்மைப் பதித்தவரே"
"எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர்
எத்துனை கொள்கில்லீர் பித்துலகீர்."
எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணினால் என்ன வரும்.10 வரும். பத்தாவது வாசல் திறந்தால் தான் இறைநிலை விளக்கம் கிடைக்கும்.
"எட்டு இரண்டும் என்ன என்று மயங்கிய வென்தனக்கே
எட்டாத நிலையெல்லாம் மெட்டுவித்த குருவே"
- வள்ளலார் பாடல்.
"சுழுமுனை மதிரவியும் பூரணமுங் கண்வாய் மூக்கும்
மகத்தான செவியோடு பரிசமெட்டும்
பதியவிடங் சுழுமுனை என்றதற்கு பேராம்."
– அகத்தியர் பாடல்
சுழுமுனை என்பது அண்ணாக்கிற்கு மேல் உள்ளயிடம். மனத்தை சுழுமுனையில் நிறுத்தி வாசி இடகலை மற்றும் வடகலை அக்னியில் கூடி மூன்றும் ஒன்றாகும். உள் சென்ற காற்று பத்தாம் வாசலில் ஏறும், மூக்கில் காற்று வெளியே வராது. ஐந்து புலன்களும் ஒடுங்கும். ரவிமதிசுடர் மூன்றும் ஒன்றாகி உஷ்ணம் கிழே பாயும். உஷ்ணம் உடம்பை வேதித்து காயசித்தி உண்டாகும்.
ஆகவே, கண்ட ஸ்தானத்தில் அண்ணாக்கு இருக்கிறது.
அதுவே அகாரமாகும்
அந்த அண்ணாக்குக்கு மேலே ஒரு நாக்கு இருக்கிறது. அதற்கு பேர் உண்ணாக்கு.
அது உகாரம் ஆகும். அந்த அண்ணாக்கு, உண்ணாக்கு என்ற இரண்டும் தராசு முனைபோல நிற்கிறது.
இந்த இரு இடத்துடன் புருவ மத்தியும் இணைந்து கொண்டு ஒரு முக்கோணத்தை உருவாக்குகிறது.
உண்ணாக்கு மேலே உச்சிக்கு கீழேயுள்ள பாதை வலம்புரி சங்கென்று அழைக்கப் படும்.
குறுக்கிடும் பகுதியில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றை நாத உணவு தரும் தருமச்சாலை என்பர். அந்த கிணற்றில் நீர் இருக்காது; அக்னி இருக்கும்.
இந்த தருமச் சாலையிலே என்றும் வற்றாத சக்திநாத அணுக்கள் அக்கினியாக கொழுமிக் கிடக்கின்றன. இந்த நாத அணுக்களின் ஊற்றுக் கண்ணாக மயிராண்டி எனும் பிடரிக் கண்ணும் ... கிணற்றின் மேல்மூடியாக மூக்காண்டி என்ற புருவமத்தியின் உள்வாசலும் இருக்கிறது.
மேலும் இந்த வலம்புரியே மரணந் தங்குந் தலமென்றும், கேள்வி உதயமாகும் ஸ்தானம் என்றும் சொல்லுவதான அபிப்ராயம்.
ஆகவே, எவனொருவன்
வலம்புரியிலுள்ள நாதாந்தக் கிணற்றில் நாதத்தை எழுப்புகின்றானோ அவனை எமன் நெருங்கமாட்டான்.
மனிதனின் எண்ணங்களினால் ஏற்படும் போக்குவரத்து செலவினால், கிணற்றில் ... நாதத்திற்கு பதிலாக கபம் உருவாகி, மரணத்தின் அஸ்திவாரம்
போடப்படுகிறது.
வள்ளலார் கூறிய சுத்த சன்மார்க்க அனுபவம் "கண்டத்திற்கு மேல்" என குறிப்பிட்டதற்கு காரணம் இந்த இடங்களை சுட்டியே !
ஞானமூலிகையான கரிசாலை மற்றும் தூதுவளையின் பயன்பாடு ... கபத்தை நீக்கவே ஆகும்.
இதன் அடிப்படை கொண்டே
வாசியோகம் பழகப்படுகிறது.
"ஊதறிந்து ஊதுபவனே சித்தன்" என்று அகத்தியர் ஞானத்தில் கூறிப்பிட்டதும் இதுவே ஆகும்.
பாரடா மனந்தனை உண்ணாக்கின் நேராய்ப் பத்தியே அண்டமதைப் பார்க்கும்போது
ஆரடா வாசியுந்தான் பிடரிமார்க்கம்
ஆகாசப் பிரமத்தில் அடங்கிப்போகும்
நேரடா நிருவிகற்ப சமாதியாச்சு
நித்யபிர்மச்சாரி என்று பேருண்டாச்சு
வீரடா சிலம்பொலியுங் காதிற்கேட்கும்
வேலெடுத்து வீதிசுத்தி வருகலாச்சு.
வீரடா அண்ணாக்கின் நேரே மைந்தா
மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.
- காகபுஜண்டர்
உள்வாங்கும் சுவாசத்தை கவனித்தால், அது நம் அடிவயிறுவரை சென்று வெளியேரும்.
இதற்கு பெயர் கீழ்கதி (அதோகதி).
இதே காற்றை மனதை உண்ணாக்கில் வைத்து மூச்சை கவனித்து (இழுத்தும் விட்டும்) பார்த்தால், நம் மூச்சு மேல் கதியாக உண்ணாக்கிற்கு மேலே செல்வதை உணரலாம். இதற்கு பெயர் ஊர்த்துவ கதியாகும்.
இப்படி மனதை உண்ணாக்கில் வைத்து சுவாசிக்கும் முறையே வாசியோகமாகும். தொடர்ந்த பயிற்சியினால், வாசி லயமாகின் அகசுவாசம் மட்டுமே ஓடுவதால், வெளிமூச்சு ஓடாது.
இப்படிப்பட்டவரால் மற்றவர்களுக்குள் ஓடும் வாசியை லயப்படுத்த முடியும்.
வாசியின் உச்ச நிலையே மறுபிறவி.
என்னை 'த்விஜன்' என்ற 'மறு பிறப்பாளன்' மட்டுமே அறிந்து கொள்ளமுடியும் என்று கீதையிலே கிருஷ்ணர் போதிக்கின்றார்.
இதையேதான் 'மாற்றிப் பிறத்தல்' என்று சித்தர்கள் போதிகின்றனர்.
அவ்வாறு மாற்றி பிறக்கும்
'மறுபிறப்பாளன்' ஐந்தாவது யோனியைக் கொண்டே பிறக்கிறான்.
பிறப்பு எடுக்க ஒரு யோனி,
பிறப்பு அறுக்க ஒரு யோனி,
பிராணன் உட்புக ஒரு குதம்,
அபாணன் வெளியேற ஒரு குதம், சளி வெளியேற ஒரு குதம், மலம் வெளியேற ஒரு குதம், மாயையில் நாம் அகப்பட ஒரு கன்னித்திரை, நம்மில் மாயையில் அகப்பட ஒரு திரை,
கீழ்த்திரை கிழிந்தால் மாயை,
மேல்திரை விலக்கினால் சாயை,
கீழ்த்திரை விலக்கினால் தான் விந்து... கருப்பையை அடைந்து கரு உருவாகி
குழந்தையை உருவாக்க முடியும்.
இந்த உலகத்தில் உதிக்கும் அனைத்து உயிர்களும் நால்வகை யோனிகளிலிருந்தே உதிக்கின்றன. அவைகள் வித்து (விதை), புழுக்கம், முட்டை மற்றும் 'கருவாகி
கர்ப்பத்திலிருந்து' ... ஆகும்.
இதில் மனிதன் பிறப்பெடுக்க ஒரு யோனி. பிறப்பை அறுக்கும்
யோனி என்பது, நமது வாய்க்குள் உண்ணாக்கு அருகில் உள்ள துவாரமே ஐந்தாவது யோனியாகும்.
நாராயணன் பள்ளிகொண்ட நாற்றம் இல்லாத யோனி இதுவேயாகும்.
எவனொருவன் இந்த ஐந்தாவது யோனியில் பிறப்பெடுக்கிறானோ, அவனே த்விஜன், அதாவது மறுபிறப்பாளன் ஆகும். இதை 'மாற்றி பிறந்தல்' என்பர்.
ஒரு ஞானவானுக்கும் பரிபக்குவமடைய
பன்னிரண்டு வருடங்கள் ஆகும். அதன் பின் கப நீர் இறங்கி நாதங்கேட்டலின் (உறவு) மூலம்... அக்கபமே சுத்தமான அமிர்தமாகிறது. இதையே ஞானிகள் 'மாற்றிப் பிறக்கும் மருந்து' என்பர்.
விந்தான ஒளியுடன் கலப்பதன் மூலம் ஒளியான குமரியாகிய சுப்பிரமணியன் ... கண்ணிற்கு குழந்தையாக தெரிகின்றான்.
இவன் எதைக் கண்டாலும், எங்கு பார்த்தாலும், அங்கே பார்வைக்கும் பார்க்கும் பொருளுக்கும் குறுக்கே இருப்பதனாலேயே நந்தி என்றும் அழைக்கப் படுகிறான்.
ஏன் குறுக்கே வந்து மறைச்சிக்கிட்டு ... நந்தி மாதிரி நிக்கறே'னு கேப்போமுல்லே?
பக்குவமடையாத நாம் ... இப்போ, எந்தப் பொருளையும் ... அதனை நாம் கற்பிதம் செஞ்சி வச்சிருக்கற மூளையிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது உண்மையான பார்வைக் கெடையாது.
பக்குவம் அடைஞ்ச பிறகு ... மூளையைக் கொண்டு பாக்கறதை ... நந்தி வந்து குறுக்கே மறைச்சிக்கிட்டு ... உண்மையான பொருளை நமக்கு காட்டும்! - இதுதான் நந்தி தத்துவத்தின் தார்ப்பரியம்!
மேலும் இதைப் பற்றி சொல்லப் போனால் ...
ஐம்பூதங்களும்... இணைந்து, பிரிந்து ஒரு சக்கரமான நிகழ்வுகள் நடை பெறுகின்றன. அதற்கு பெயர் 'சிதம்பர சக்கரம்'.
"சிதம்பர சக்கரம் தான் அறிவார் இந்த
சீமையில் உள்ள பெரியோர்கள் சிதம்பர சக்கரம் தானும் என்றால் அதற்குள் தெய்வத்தையல்லோ அறியவேணும்".
சுவாசத்தால் ஏற்படும் மாற்றங்களும், அதில் ஐம்பூதங்களில் செயல்பாடுகளும்தான் ... நமது ஒவ்வொரு செய்கைகளும் !
"சரமானது மண்ணை சார்ந்து நடக்கும்போது ...
மண்ணில் மண் - எதிலும் நிறைவு உண்டாகும்,
மண்ணில் நீர்- அடிசேரலாம்,
மண்ணில் காற்று- அலைந்து அலைந்து அவனடி சேர்வர்,
மண்ணில் நெருப்பு- உடல் உஷ்ணம் அதிகமாகும்,
மண்ணின் ஆகாயம்- பிடி கிடைக்காமல் சுற்றிக் கொண்டே இருப்பர்.
சரமானது நீரை சார்ந்து நடக்கும்போது ...
நீரில் நிலம்- மூச்சு நீருக்குரிய
சரத்திலாரம்பித்து, மண்ணிற்குரிய பிருதிவி சரத்தில் முடிந்தால்... கலத்தல் எனும் ஐக்கிய பாதையான சமாதி நிலையை அடையலாம்.
நீரில் நீர்- எல்லாவற்றிலும் வளர்ச்சி,
நீரில் நெருப்பு- உடல் குளிர்ச்சியாகும்,
நீரில் காற்று- அமிர்தம் சுரக்கும்,
நீரில் ஆகாயம்- அப்படியே அதிர்ந்து போய் ஒரு சில நிமிடங்கள் இருக்கும் நிலையில் இம்மூச்சு ஓடும்.
சரமானது தீயை சார்ந்து நடக்கும்போது,
தீயில் மண்- ஆயுள் நீட்டிப்பு,
தீயில் நீர்- ஆயுள் குறைவு,
தீயில் தீ- இருநிலை மாற்றம்,
தீயில் காற்று- மயக்கத் தோற்றத்தை உருவாக்கும்,
தீயில் ஆகாயம்- புவிஈர்ப்பு விசையை மீற முடியும்.
சரமானது காற்றை சார்ந்து நடக்கும்போது,
காற்றில் மண்- நோய் அறிகுறி,
காற்றில் நீர்- விந்து மேலேறும்,
காற்றில் தீ- உடம்பில் தீயின் சுழற்சியை காணலாம்.
காற்றில் காற்று- காந்தவியல் அழுத்தம் மேற்பட்டு தலை கணக்கும், நாதம் கேட்கும்,
காற்றில் ஆகாயம்- பாவபுண்ணியம் கலைந்து எரிந்துவிடும் நிலை.
சரமானது ஆகாயத்தை சார்ந்து நடந்தால்,
ஆகாயத்தில் மண்- உச்சி திறக்கும், தியானத்திற்கு உகந்தது,
ஆகாயத்தில் நீர்- நம் சக்தியானது இடம்விட்டு இடம் நகரும்,
ஆகாயத்தில் காற்று- விசுத்தியில் நிற்கும்,
ஆகாயத்தில் தீ- நந்தியாகிய பரமாத்மாவை தெளிவாக காண முடியும்,
ஆகாயத்தில் ஆகாயம்- இருள் நிலை, மாயை, முழு ஞானம் உற்பத்தியாகும்.
மேலும் சந்திரகலை குளிர்ச்சியாக இருப்பதால் ... அது உஷ்ணத்தை நாடி செல்லும், இதில்தான் அறிவு உதிக்கின்றது. இதேபோல் சூரியகலை
உஷ்ணமானதால் குளிர்ச்சியை நோக்கி
செல்லும், இதில் மாயை அல்லது பிரமை
உண்டாகின்றது. பிரமை என்பது பிரம்மதோடு இணைந்திருப்பது என்ற பொருளாகும்."
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் என்பதற்கு ஏற்றாற் போல் இந்த பிண்டத்தில் (உடலில்) பஞ்சபூத சரத்தால் என்னென்ன மாற்றம் ஏற்படுகின்றதோ ... அதேபோல் அண்டமாகிய பிரபஞ்சத்திலும் மாற்றம் நிகழும்.
நம் உடலுக்கு உள்ளும்
வெளியும் நிகழ்பவை ...
"பிருத்வியில் ஏற்படும் மாற்றம் ...
மண்ணை மண்ணில் போட்டால்- நிறையும்,
மண்ணை நீரில் போட்டால்- அடி செல்லும்,
மண்ணை காற்றில்- அலைந்து வேறிடம் பின்பு கீழ் அடிவிழும்,
மண்ணை தீயில்- உஷ்ணமாகும், மண்ணை ஆகாயத்தில்- சுழலும்.
அப்புவில் ஏற்படும் மாற்றம்...
நீரை மண்ணில் கலந்தால்- பரவும்,
நீரை நீரில்- பெருகும்,
நீரை தீயில்- குளிர்ச்சி,
நீரை காற்றில்- ஆவியாகி மேகமாகி மழை வரும், நீரை ஆகாயத்தில்- உறை நிலை.
தேயுவால் ஏற்படும் மாற்றம் ...
தீயை மண்ணில் போட்டால்- அழியா (உஷ்ணம்),
தீயை நீரில் போட்டால்- அழிவுநிலை, தீயை
தீயில்- இருநிலை மாற்றம்,
தீயை காற்றில்- அனல், கானல்நீர், வெக்கை, உருக்கம்,
தீயை ஆகாயத்தில்- குமிழாகி பறக்கும்.
வாயுவால் ஏற்படும் மாற்றம் ...
காற்றை மண்ணில்- விரிசல்,
காற்றை நீரில்- நீர் சுழற்சி,
காற்றை தீயில்- தீ சுழற்சி,
காற்றை காற்றில்- காந்தவியல் அழுத்தம்,
காற்றை ஆகாயத்தில்- மேகம் கலையும்.
ஆகாயத்தால் ஏற்படும் மாற்றம் ...
ஆகாயத்தை மண்ணில்- பிரளயம், தியானம்,
ஆகாயத்தை நீரில்- புவி நகரும், இடமாறும்,
ஆகாயத்தை தீயில்- ஒளி பெருகும்,
ஆகாயத்தை காற்றில்- கடல்நீர் உள்வாங்கும்,
ஆகாயத்தை ஆகாயத்தில்- இருநிலை, மாயை, பிரமை.
நம் ஸ்தூல சூட்சும சரீரங்களில் ஸ்தூலமாக மற்றும் சூட்சுமமாக நடைபெறும் காரண காரியங்களுக்கு பஞ்சபூதங்களின் பயன்பாடுகள் ...
ஸ்தூலத்தில்,
மண்ணில் மண் சேர்ந்தால் உடலில் சக்தி குறைந்து அசதி ஏற்படும்.
மண்ணில் நீர்- உடலில் மாமிசம் உருவாகின்றது,
மண்ணில் தீ- சருமமாகிய தோல் உருவாகின்றது,
மண்ணில் வாயு- நரம்புகளும்,
மண்ணில் ஆகாயம்- ரோமமும்,
நீரில் நீர்- சிறுநீரும்,
நீரில் மண்- உமிழ்நீரும்,
நீரில் வாயு- உதிரமும்,
நீிரில் தீ- வியர்வையும்,
நீரில் ஆகாயம்- சுக்கிலமும்,
தீயில் தீ- நேத்திர கண்ணும்,
தீயில் ஆகாயம்- செவியும்,
தீயில் வாயு- சரீரமும்,
தீயில் நீர்- வாயும் நாக்கும்,
தீயில் மண்- நாசியும்,
காற்றில் மண்- இருதயமும் பிராணக் காற்றும்,
காற்றில் நீர்- குதமும் அபான வாயுவும்,
காற்றில் காற்று- சர்வ நாதங்களும்
வியானனும்,
காற்றில் தீ- கழுத்தும் உதானனும்,
காற்றில் ஆகாயம்- தொப்புளும், சமானனும்,
ஆகாயத்தில் மண்- இருதயமும்,
ஆகாயத்தில் நீர்-நாசியில் பித்தமும்,
ஆகாயத்தில் தீ- மார்பும்,
ஆகாயத்தில் காற்று- கண்டமும்,
ஆகாயத்தில் ஆகாயம்- சிவமும் உருவாகின்றன.
சூட்சுமத்தில்,
மண்ணில் மண் கலந்து குதமும்,
மண்ணில் நீர்- குய்யமும்,
மண்ணில் தீ- கைகளும்,
மண்ணில் காற்று- பாதங்களும்,
மண்ணில் ஆகாயம்- வாக்கும்,
நீரில் ஆகாயம்- சத்தமும்,
நீரில் காற்று- தொடு உணர்வும்,
நீரில் தீ- பார்வையும்,
நீரில் நீர்- சுவையும்,
நீரில் மண்- வாசனையும்,
தீயில் தீ- பசியாகிய தீபாக்கினியும்,
தீயில் மண்- தாகமும்,
தீயில் நீர்- தூக்கமும்,
தீயில் காற்று- கொட்டாவியும்,
தீயில் ஆகாயம்- சங்கமமாகிய கலத்தலும்,
வாயுவில் வாயு- ஓட்டமும்,
வாயுவில் நீர்- இருத்தலும்,
வாயுவில் தீ- தத்தித்தத்தலும்,
வாயுவில் மண்- நடத்தலும்,
வாயுவில் ஆகாயம்- படுத்தலும்,
ஆகாயத்தில்
மண்- ஆசையும் அகங்காரமும்,
ஆகாயத்தில் நீர்- துவேசமும்,
ஆகாயத்தில் தீ- பயமும்,
ஆகாயத்தில் காற்று- வெட்கமும், ஆகாயத்தில்
ஆகாயம்- மேகமும் உருவாகின்றன.
ஆக ஒரு பூதமானது மற்றைய
பூதங்களில் கலந்து உடலிலும், வெளியிலும், ஸ்தூலமாகவும், சூட்சமமாகவும் ஏற்படும்
மாற்றங்களுக்கு காரணம் பஞ்சபூதங்களே!
பிறக்கும் முன் தாயின் கருவிலும், பிறந்தபின், வெளியிலும் உடல் உறுப்புகள் உருவாவதற்கு காரணமாகுவதும் பஞ்சபூதங்களே !
இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட பிறகு என்ன செய்யணும் ?
அடுத்தவன் சொத்தை ஆட்டைய போடணும், பல்லைக் கெஞ்சிகிட்டு எதிர்பாலினம் பின்னாலேயே போகணும், சிலையைக் கடத்தணும், முழுக் கெடாயை முழுசா முழுங்கணும். அப்படித்தானே ?
இதெல்லாம் நாம செய்யறோம்'னா என்னா அர்த்தம்?
இந்த பாழாக போகப் போற உடம்புக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து... வீணாப் போகப் போறோம்'னு அர்த்தம்.
என்னா செய்யணும் நாம ?
"வல்ல வாசல் ஒன்பதும் அருத்தடைத்த வாசலும்
சொல்லும் வாசலோ ரைந்தும் சொல்லி விம்மி நின்றதும்
நல்ல வாசலைத் திறந்த ஞான வாசலூடு போய்
எல்லை வாசல் கண்டபின் இனிப் பிறப்ப தில்லையே."
- சித்தர் சிவவாக்கியம்
நம் உடலில் உள்ள ஒன்பது வாசல்களில் ... அறுத்தடைத்த வாசலாகியதாகச் சொல்லப்படும் ... பத்தாம் வாசலில் உள்ள ஓரெழுத்தை அறிந்து, அதிலேயே ஐந்தே பூதங்களும் அடங்கியிருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதிலேயே தியானிக்க... மெய்ப்பொருள் நீராக விம்மி நின்றது.
அதுவே நம் தீயாகிய நல்ல வாசலை வாசியினால் திறந்து ... ஞானம் விளங்கும் மௌனத்தில் ஊன்றி சோதியாக ஈசன் உலாவுகின்ற எல்லையான வாசலைக் கண்டு கொண்டு... அவனையே தியானித்திருப்பவர்கள் ... இறவா நிலை பெற்று இனி இப்பூமியில் பிறப்பது இல்லையே !
----------
நூல்;செப்படு வித்தை.