Shiva Guru Spark Yoga 🧘♀️
வாசி - யினால்
பார் கடலைக் கடையுங்கள்
******** ********** *********
பார்கடலை எப்படி கடைய வேண்டும் கடைந்தால் என்ன நடக்கும் என்பதை சூட்சம கதையின் மூலம் வியாசர் விளக்கியுள்ளார்.
அதை நமக்குள் ஆராய்ந்து தெளிய வேண்டும்.
என்னப்பன் நந்தீசர் எமக்கு அருளிய விளக்கத்தை தங்களுக்கும் தருகிறேன்...
வாதம், பித்தம், சிலேத்துமம் எனும் மூன்றுதான் சந்திர,சூரிய சூட்சும கலைகளாகிறது.
வாசுகி எனும் சுவாசப் பாம்பின் ஒருபுறமான வலது நாசி எனும் சூரியகலை சுவாசமானது தேவர்களாகவும்
மறு புறமான இடது நாசி எனும் சந்திர கலை சுவாசமானது அசுரர்களாகவும் சூழுமுனை எனும் சூட்சம கலை சுவாசத்தை மத்தாகக் கொண்டு (சந்திர சூரிய நாடி சுழுமுனை நாடியை மத்தை சுற்றிய பாம்பு போல் இருக்கும்)
கூர்மம் எனும் ஆமை தனது 4 கால் மற்றும் தலை என 5 உறுப்புகளையும் உடலுக்குள் அடக்கிக் கொள்வது போல நமது ஐம்புலன்களையும் அடக்கி
சந்திர, சூரிய சுவாசக் கலைகள் மூலம் மாற்றி மாற்றி வாசி வித்தை கொண்டு கடைந்தால்
மூலாததாரத்தில் ஐம் பூத கணங்களுக்கும் அதிபதியான கணபதி தரிசனம் கிடைக்கும்
கடல் அலை ஓசை இங்கு கேட்கும்
இங்கே முக்கோண பெட்டகத்திற்கு உள்ளே உள்ள தனஞ்செயன் எனும் வீங்கல் காற்று பாம்பு போல சீறி மேலே பாயும்.
சுவாதிஷ்டான சக்கரத்தில் முட்டி நிற்கும். அங்கு மண்ணை ஆதாரமாகக் கொண்டு பிரம்ம தேவனும் சரஸ்வதியும் காட்சி தருவார்கள்.
பின் அந்த பாம்பானது சுக்கிலம் அல்லது சுரோனிதத்தில் உள்ள வித்தைக் (விதை) கொண்டு மேல் நோக்கி சீறும்
மணிபூரகத்தில் நீரை பூத ஆதாரமாகக் கொண்டு திருமாலும் மஹா லட்சுமியும் ஆசி வழங்குவர்
இங்கே புல்லாங் குழலின் ஓசை கேட்கும்.
அடுத்து வாசிப் பாம்பானது அனாகத சக்கரத்தில் சீறி பாயும். அங்கே ருத்ர சிவமும் பார் (உலக) அதிபதி பார்வதியும் ஆசி வழங்குவார்கள் இங்கு சலங்கை ஒலிக்கும்.
இப்போது நாம் கணபதி, சரஸ்வதி,லஷ்மி ,பார்வதி என நான்கு தேவர்களின் ஆசி பெற்றோம்.
அதன் பிறகே விசுக்தி கண்டத்தில் நாம் முற் பிறவிகள் மற்றும் இப்பிறவி என அனைத்து பிறவிகளிலும் செய்த ஒட்டு மொத்த பாவ புண்ணிய கர்ம வினைகளும் விஷமாக பிரிந்து நிற்கும்.
(தயிரைக் கடையும் போது வெண்ணை தனியாக வருவது போல சுத்த ஆன்மா தனித்தும் ஆன்மாவிலுள்ள பாவ புண்ணிய கர்மாக்கள் விஷமாகவும் நிற்கும்.)
இந்த ஆலகால விஷத்தையே
மஹாதேவர் உண்டு நம்மை தூய ஆன்மாவாக ஆக்குகிறார்.
இதுவே பிரதோசக் காலம்.
இங்கே சங்கநாதம் ஒலிக்கும்
இதன் பிறகே உண்ணா முலையில் கங்கை எனும் அமிர்தப் பால் சுரக்கும். அதை நாம் உண்டு அழுக்கற்ற தூய ஆன்மாவாக ஆகிறோம்.
இதுவே சிவ தாண்டவமான நடராச பஞ்ச தாண்டவத்தைக் காணும் பக்குவம்.
5 ஆதாரங்கள் தாண்டி ஆறாவதாக ஆக்ஞா சக்ரத்தில் நடராஜ தாண்டவம் வேல் வடிவில் ஜோதியாய் தெரியும்.
இதுவே ஆறுமுகம் (ஞான சக்தி)
இப்போது முத் தீ எனும் சந்திர சூரிய அக்னி மண்டலங்களை நாம் காண்கிறோம்.
இதுவே முத்தி (கிரியா சக்தி)
இதன் பிறகு சிவத்தின் மீது மட்டும் இச்சை (ஆசை) வரும். அப்போது தீவிர மௌன தவம் ஊசிமுனை தவம் என சொல்லப் படும் தவத்தால் சிவத்தோடு கலப்பதே சித்தியாகும்.
பத்தாம் வாசலில் சகஸ்கார தளமானஇருதயக்கமலமான ,
சுழுமுனை எனும் வெட்டவெளியில் சிவசக்தியாய் பரசிவத்தோடு கலத்தல்
இதுவே சித்தி ( இச்சா சக்தி)
இதுவே சித்தர் கலை.
இதற்கு மெய் பொருள் எனும் இறைவன் நம்முள் இருக்கும் பத்தாம் வாசல்.
No comments:
Post a Comment