SPARK 💥 YOGA WISDOM
அகரம்
ஆரம்பம்.
உயிர் துவக்கம்.
உண்மை ஒலி.
ஆற்றலின் அடி நாதம்.
ஆராய்ந்து பார்த்தால்
படைப்பின் பிரமாண்டம்
பதுங்கி இருக்கும்.
பிரிக்க முடியாத
பகுதி இது.
ஒற்றைச் சொல்
வேர்ச் சொல்
மொழி மரத்தின் விதை.
சப்தத்தின் கமகம்.
சாதிக்கத் தெரிந்தவனுக்கு
மௌன ஆயுதம்.
கடையத் தெரிந்தால்
காட்டாற்றின் வேகம்
சீறிக் கிளம்பும்.
அசையும் அணு.
பரிமாணத்தின்
பரிணாமம்.
மெய்யையும்
மெய்யாக காட்ட
உய்வளிக்கும் உயிரோசை.
வரியில்
வரையாத ஓவியமாகத்
திகழும் காவியம்.
அகரவித்தை
அணுகியவனுக்கு சித்தை
அள்ளி வீசும்.
மொத்த வரியையே
வரைந்து வைத்து
அடையாளப் படுத்தும்
அகரம்.
ஆம்
சுழியனில் ஆரம்பம்.
படைப்பும்
அண்ட பிண்டமும்
அறிய முடியாதவழியில்
வெற்றுநிலை தோரணத்தை
விளக்கப் போட்ட வட்டம்.
கோள் சுழற்சியில்
வான் சுழற்சியும்
மண் சுழற்சியும்
சுற்றிப் போடும்
பொட்டு.
ஆதி அந்த இணைப்பை
முழுமைப் படுத்தும் தோற்றம்.
கரு சுழற்சியில் ஆரம்பித்து
பிறைக் கோட்டில் வளர்ந்து
குறுக்குக் கோட்டில்
வடதென் முனையை இணைத்து
நெடுங்கோட்டில்
கீழ் மேல் நிலையை ஸ்தாபித்து
மொத்த வரைதலும்
இந்த நான்கு நிலையில்
அடக்கம் என்ற
பாடத்தைப் புகட்டி
அறிய வைக்க
அடரிருளில் இருந்து
படர்ந்து வரும்
ஒளிக்கீற்றே
இந்த அகரம்.
மூச்சின் முனை.
போக்கின் துளை.
நினைவின் மனை.
ஓசையின் வளை.
உயிர்ப்பிக்க நிலை.
எட்டின் குறி
சுட்டெழுத்து
சிவன்
குறிலொலி
அன்பு
அகம்
தமிழ்
அடக்கம்
இயக்கம்
அம்மா
என்று
எழுதாத ஓவியமாய்
திரண்டு வரும்
அருந்தமிழின் முதலெழுத்து.
No comments:
Post a Comment