*தன்னை அறிதல் என்றால் என்ன*?
நாம் யார் என்று சிந்திக்க வேண்டும்.
நம் தந்தை தாய் மூலமாகத் தான் பிறந்தோம்.
இந்த மனித உடம்பாகிய , யாரும் கட்ட முடியாத தேகாலயத்தைக் கட்டி முடித்த தேவதச்சன் யார்?
தாயின் கருவறையில் தானே பத்துத் திங்கள் இருந்தோம்.
அப்போ தாய் தான் கட்டியிருப்பாளோ
எனில் நிச்சயமாக அவர்களில்லை.
பின் யார்தான் கட்டியது?
தந்தையிடம் இருந்து புறப்பட்ட ஜீவ வித்து, தாயின் கருவறையில் வந்து பாய்ந்தவுடன் தாயின் இரத்தம் மற்றும் இதர சத்திலிருந்து அந்த ஜீவ வித்து ( ஜீவாத்மா)வும், உடன் வந்த பரமாணுவாகிய பரமாத்மாவும் சேர்ந்துஇந்த அருமையான திருமாளிகையைப் பத்துத் திங்களில் கட்டி முடிக்கிறார்கள்.
நம் தேகாலயத்தைக் கட்டிய பின்னர், பரமாத்மா நம்மைவிட்டு சென்று விடுகிறார்களா?
இல்லை. நம்கூடவே தான் இருக்கிறார்கள்.
அவர் - அந்த ஆதிமூலம் நம்முள்ளே இருப்பதால் தான் நாம் பேசுகிறோம்;பார்க்கிறோம்; நடமாடுகிறோம்.
அவர் தேகாலயத்தின் நடுவீட்டில்- சுழிமுனையில் கோடிசூரியப் பிரகாச ரூபத்தில், ஒரு நூற்றாண்டு காலம் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் நம்மிடத்தே இருந்தாலும் நம் அறிவு கொண்டு நம்மால் அவரை அறிந்து கொள்ள முடிய வில்லை.
ஆனால்,அந்தப் பரமாத்மாவே மானிட தேகங் தாங்கி குருவடிவில் வந்து நம்மீது கருணை கொண்டு தொட்டுக் காட்டி அறிவிக்கும் போதுதான் நம்மிலிருக்கும் பரமாத்மா சொரூபத்தை உணர முடிகிறது.
இந்த பிரம்ம வித்தை செயல் தான் தன்னை யறிதல் ஆகும்.
இந்த பரஞானத்தை உணர்ந்தவன் தேவனாகிறான்.
இந்தத் தேடல் இல்லாமல் உலகியல் சார்ந்த உடலின்ப வாழ்க்கையில் வாழ்பவன் நரன் எனப்படுகிறான்.
தேடல் உள்ளவன் மனிதன் என்ற தகுதிக்கு உரியவனாகிறான்.
" தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்."
- *திருமந்திரம்*
No comments:
Post a Comment